முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 8-ந் தேதி விவசாயிகள் சந்தித்து பேச ஏற்பாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 8-ந் தேதி விவசாயிகள் சந்தித்து பேச ஏற்பாடு
x

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தொடர் போராட்டம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை.சந்திரசேகரன்,டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறும்போது, திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்கு உண்டான நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி வங்கிகளில் பெறப்பட்டுள்ள சுமார் ரூ.300 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்து விவசாயிகளை கருப்பு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் வரை புதிதாக சர்க்கரை ஆலையை வாங்கியுள்ள நிர்வாகம் அங்கு பராமரிப்பு பணிகளை செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும். மேலும் தமிழக முதல்-அமைச்சரை வருகிற 8-ந் தேதி விவசாய சங்க பிரதிநிதிகள் சிலரை அழைத்துக் கொண்டு நேரில் சந்தித்து ஏற்பாடு செய்து உங்களுடைய பிரச்சினைகள் அவரிடம் எடுத்துரைக்கப்படும். முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

இதை ஏற்று கொண்ட விவசாயிகள், முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். அதன்படி நேற்று 152-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story