பரங்கிப்பேட்டை அருகே குட்டையில் விவசாயி பிணம் கொலையா? போலீஸ் விசாரணை


பரங்கிப்பேட்டை அருகே    குட்டையில் விவசாயி பிணம்    கொலையா? போலீஸ் விசாரணை
x

பரங்கிப்பேட்டை அருகே குட்டையில் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தினார்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

குட்டையில் ஆண் பிணம்

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி பகுதியில் இருந்து சேவாமந்திர் பள்ளி செல்லும் சாலையோரம் உள்ள குட்டை நீரில் மூழ்கியபடி 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், அவர் அரியகோஷ்டி தாண்டவராயன் தோப்பு தெருவை சேர்ந்த விவசாயி தேவேந்திரன்(வயது 55) என்பதும், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு சென்றவர் குட்டையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து தேவேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரன் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து குட்டையில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story