வாழை மரங்களை வெட்டி அகற்றும் விவசாயிகள்
தேவர்சோலை, ஸ்ரீமதுரையில் பயிர்களை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதை தடுக்க விவசாயிகள் விளைநிலங்களில் உள்ள வாழை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.
கூடலூர்,
தேவர்சோலை, ஸ்ரீமதுரையில் பயிர்களை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதை தடுக்க விவசாயிகள் விளைநிலங்களில் உள்ள வாழை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.
காட்டு யானைகள்
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில சமயங்களில் வீடுகளையும் உடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி, பேபி நகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஊருக்குள் வருகிறது.
நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் வந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை சரித்து போட்டு தின்று சேதப்படுத்தியது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிகாலை வரை அப்பகுதியில் காட்டு யானை நின்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
பயிர்களை வெட்டிய விவசாயிகள்
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் விளைநிலத்துக்கு வந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக பராமரித்து வந்த தென்னை மரங்களை யானை நாசம் செய்துள்ளதை பார்த்து கவலை அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, காட்டு யானை பிரச்சினையால் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதற்கு ஏற்ப இழப்பீடு தொகையும் வழங்குவதில்லை என்றனர். இதேபோல் ஸ்ரீ மதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியிலும் காட்டு யானை தினமும் வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் யானை வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளைநிலத்தில் பராமரித்து வரும் வாழை மரங்கள் மற்றும் பயிர்களை தாங்களாகவே வெட்டி அகற்றி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வனத்துறையினர் நேரில் வந்து காட்டு யானையை விரட்டினாலும், தற்காலிகமாக அந்த இடத்தில் இருந்து செல்கிறது. பின்னர் சில மணி நேரத்தில் மீண்டும் வந்து விடுகிறது என்றனர்.