திருவண்ணாமலையில் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
குறைத்தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பேசியதாவது:-
திருவண்ணாமலை விவசாய தொழிலை மட்டுமே சார்ந்த மாவட்டமாகும். மாதத்தில் ஒருநாள் பவுர்ணமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை வைத்து திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி வைத்து வசூல் செய்வது நியாயம் இல்லாதது. எனவே திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டு உள்ளது. யூரியாவுடன் இணை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல மாதங்களாக புகார் செய்து வருகின்றோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. உர விற்பனை கடைகளில் ஆதார் அட்டை அடிப்படையில் யூரியா வழங்குவதை நிறுத்தி விட்டு விவசாயிகளின் நில பரப்பளவிற்கு ஏற்ப யூரியா வழங்க வேண்டும்.
திருவண்ணாமலை தாலுகாவில் ஒரு இடத்தில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நாத்தம்பூண்டி மற்றும் நாயுடுமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
குளங்களை தூர்வார வேண்டும்
அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மழை காலம் நெருங்கியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் விரைவாக தூர்வார வேண்டும். கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்திற்கும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கண்டிப்பாக வரவழைத்து விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் தனிநபர் கோரிக்கையை விவசாயிகள் மனுவாக அளித்தனர். விவசாயிகள் வலியுறுத்தி இருந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.