முந்திரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


முந்திரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முந்திரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

கடலூர்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா, வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

வங்கி கடன்

மாதவன் (விவசாய சங்க நிர்வாகி) :- குறுவை சாகுபடி தொடங்கி உள்ளதால், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறுவைக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். டெல்டா பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாராத வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பிச்சாவரம் ஷட்டரை சரி செய்ய வேண்டும்.

தேவநாதன் (விவசாயி) :- பண்ருட்டி பகுதியில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்று விவசாயிகள் அளித்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேறவில்லை. தாட்கோ உள்ளிட்ட எந்த கடன்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமலிங்கம் (விவசாயி) :- குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் 122 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது. இந்த வயலுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. விளைந்த எள்ளை அறுவடை செய்ய முடியாமல் அனைத்தும் வீணாகி வருகிறது. எந்திரம் மூலம் அறுவடை செய்ய தோட்டக்கலை துறையில் வசதி ஏற்படுத்தி தரப்படுமா?

தோட்டக்கலை துறை அலுவலர்:- எந்திரம் உள்ளது. தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இறக்குமதிக்கு தடை

ரவீந்திரன் (விவசாயி) :- ஒருபோக குறுவை சாகுபடி மட்டுமே தற்போது நடக்கிறது. இதை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகள் வருவாய் உயர வெளிநாட்டு முந்திரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அனுமதியின்றி இயங்கும் இறால் பண்ணைகளை மூட வேண்டும்.

கலியபெருமாள் (விவசாயி):- எங்கள் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்த சிறு தானியங்களை வீணாக்கி வருகிறது. இதை தடுக்க வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

விவசாயி கண்ணீர்

குப்புசாமி (விவசாயி) :- முந்திரிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஒரு மூட்டை முந்திரிக்கு ரூ.15 ஆயிரம் கிடைத்தது. தற்போது ஒரு மூட்டை ரூ.6 ஆயிரம் தான் கிடைக்கிறது. இதனால் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வீட்டு வரி, குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தவிக்கிறோம்.

(முந்திரி விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு ஆதரவாக கணேசன் உள்ளிட்ட மற்ற விவசாயிகளும், முந்திரி விவசாயிகள் நலன் கருதி வெளி நாட்டில் இருந்து முந்திரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.) மேற்கண்டவாறு கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விவசாயிகள் காந்தி, சிவசக்திவேல், ரெங்கநாயகி, செல்வராஜ், ராஜா, மகாராஜன், அறவாழி உள்ளிட்ட விவசாயிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story