உரங்கள் கிடைக்க விவசாயிகள் கோரிக்கை


உரங்கள் கிடைக்க விவசாயிகள் கோரிக்கை
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளுக்கு உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் லலிதாவிடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு செய்து 20 நாட்கள் ஆகியும் விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைக்கவில்லை. ஆகவே, விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதித்தால் மகசூல் குறையும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

220 மனுக்கள்

மேலும், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித் தொகை கோரியும், புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிக்கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 220 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

உதவிகள்

அதனைத்தொடர்ந்து சீர்காழி தாலுகா வடகால் கிராமத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் சவுதிஅரேபியாவில் உயிரிழந்ததால் அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சத்து 52 ஆயிரத்து 383-க்கான காசோலைகளையும், தரங்கம்பாடி தாலுகா, நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த செல்வகுமாரி என்பவர் பெட்டிக்கடை வைக்க மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையும், குத்தாலம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பெட்டிக்கடை வைக்க ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.





Next Story