மஞ்சூர் பகுதியில் 3 நாட்களாக காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை -அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை


தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் பகுதியில் 3 நாட்களாக காய்கறி பயிர்கள் மற்றும் தேயிலை எஸ்டேட்டை காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது.

நீலகிரி

மஞ்சூர்

மஞ்சூர் பகுதியில் 3 நாட்களாக காய்கறி பயிர்கள் மற்றும் தேயிலை எஸ்டேட்டை காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மஞ்சூர் பகுதிக்கு வந்த காட்டு யானை அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் மற்றும் காய்கறி தோட்டங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. மேல்குந்தா பகுதியை சேர்ந்த குமார் என்ற விவசாயியின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கேரட் பயிர்களை தின்று மிதித்தும் நாசம் செய்தது. இரவு முழுவதும் அட்டகாசம் செய்த யானை அதிகாலையிலேயே தோட்டத்தில் இருந்து வெளியேறியது.

மீண்டும் அட்டகாசம்

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மேல்குந்தா பகுதியில் இருந்து பெரியார் நகர் பகுதிக்கு சென்ற காட்டு யானை வனப்பகுதிக்குள்ளும் காய்கறி தோட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி திரிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொட்ட கம்பை சேரனூர் பகுதிக்குள் விழுந்து அங்கும் மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானையை விரட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் பட்டாசுகள் வெடித்தும் தகரங்களை தட்டியும் சத்தம் எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒற்றை காட்டு யானை என்பதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்திலிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டு யானையால் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து சீனிவாசன் கூறுகையில் கேரள மாநிலம் இணைய சீகை பகுதியில் இருந்து தனியாக வந்துள்ள இந்த காட்டு யானைக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம், இரவு நேரத்திற்குள் தோட்டத்திற்குள் வந்து கேரட் பயிர்களை சாப்பிட்டு விட்டு பகல் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இருந்தாலும் அந்த யானையை அடர்ந்த விரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story