குளங்களை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை
உடன்குடி பகுதி குளங்களை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி:
உடன்குடியில் தாங்கைகுளம் கருமேனி ஆறு பகுதி விவசாயிகள் நலச்சங்க கூட்டம் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. நடேசன், செந்தில்குமார் முருகேசன் விஜயகுமார். ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் அலெக்சாண்டர் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உடன்குடி பகுதி கிராமப்புறங்களில் உள்ள குளங்களை பராமரிப்பதற்கும், குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்களை பராமரிக்கவும் அரசு உத்தரவிடவேண்டும். மும்முனைமின்சாரம் மிகவும் குறைவாக வருகிறது. அதனால் முழுநேரமும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு். மழை காலங்களுக்கு முன்பு தாங்கைகுளம் கருமேனியாறு பகுதியில் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும். ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற முயற்சியில் புதிதாக உருவான குளங்களை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வசந்தகுமார் நன்றி கூறினார்.