விழுப்புரம் பகுதியில் வெள்ளரிப்பழம் விளைச்சல் அமோகம் பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை


விழுப்புரம் பகுதியில் வெள்ளரிப்பழம் விளைச்சல் அமோகம் பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் கோடையில் குளிர்ச்சியை அள்ளித்தரும் வெள்ளரிப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. அதேநேரத்தில் பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இளநீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த நுங்கு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், தர்பூசணி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோடை காலத்தில் குளிர்ச்சியை அள்ளித்தரும் பழங்களில் முக்கிய அங்கம் வகிக்கும் வெள்ளரிப்பழங்கள் தற்போது விற்பனைக்கு வரத்தொடங்கி இருக்கிறது. கோடை காலத்திற்காக விழுப்புரம் அருகே பானாம்பட்டு, ஆனாங்கூர், ராகவன்பேட்டை, கோணங்கிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், ஆழாங்கால் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் வெள்ளரிப்பழங்களை கடந்த மார்ச் மாதம் சாகுபடி செய்தனர்.

விளைச்சல் அமோகம்

இவைகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வெள்ளரிப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இருப்பினும் பூச்சி தாக்குதலால் ஒரு சில பழங்கள் அழுகி நாசமாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிப்பழம் சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் சற்று அமோகமாக உள்ளது. இரு ஒருபுறம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பூச்சிநோய் தாக்குதலால் ஒரு சில பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு அழுகி நாசமாகியுள்ளது.

பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க

நாங்கள் ஒரு ஏக்கர் வெள்ளரிப்பழம் சாகுபடி செய்வதற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஏக்கருக்கு சுமார் 2 ஆயிரம் கிலோ வெள்ளரிப்பழங்கள் கிடைக்கும். இதன் மூலம் செலவுபோக எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் விளைச்சல் அதிகம் இருந்தபோதிலும் பூச்சிநோய் தாக்குதலால் சில பழங்கள் அழுகி வீணாகி வருவதால் எங்களுக்கு செலவுபோக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட வெள்ளரிப்பழங்களை பார்வையிட்டு பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய மருந்துகளை வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றனர்.


Next Story