பாசன வாய்க்கால் மதகு தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்
கூத்தாநல்லூர் அருகே பாசன வாய்க்கால் மதகு தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் அருகே பாசன வாய்க்கால் மதகு தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பாசன வாய்க்கால்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து, மாவூர் செல்லும் சாலையில் உள்ளது ஊட்டியாணி கிராமம். இந்த கிராமத்தையொட்டி செல்லும் வெள்ளையாற்றில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்ல வசதியாக பாசன வாய்க்கால் உள்ளது.
இதன் மீது தரைப்பாலம் கட்டப்பட்டு, தடுப்புச்சுவர் மற்றும் மதகு அமைக்கப்பட்டு உள்ளது. மதகின் ஒரு பகுதி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விட்டது.
சீரமைக்க வேண்டும்
இந்த நிலையில் வாய்க்கால் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ஆபத்தான வளைவு பகுதியில் மதகு அமைந்துள்ள நிலையில் அதன் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்்க வேண்டி உள்ளது.
தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் எச்சரிக்கைக்காக தற்காலிகமாக துணி கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த பாசன வாய்க்கால் மதகின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.