பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாக்கம் கிராமம். இங்கு சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் சேகரிக்கப்படும் தண்ணீர் மூலம் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைகளையும், விவசாய தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த ஏரியின் மூலம் பாக்கம், புதூர், கானாங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆனால், தற்போது இந்த ஏரி முறையான பராமரிப்பு இல்லாததால் முழுவதும் தூர்ந்து போய், செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்து ஏரியே தெரியாத நிலையில் உள்ளது.
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளிலும் உள்ள மதகுகள் மற்றும் கரைகள் சீரமைத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாக்கம் ஏரி மட்டும் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் முட்புதர்களுடன் காணப்படுவதால், விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிப்பு இல்லாமல் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருந்தது. இதனால் ஏரி நீரை பயன்படுத்தி முப்போகம் பயிர் செய்யப்பட்டு பராமரித்து வந்தோம். ஆனால் தற்போது ஏரியை முறையாக பராமரிக்காததால் முற்றிலும் தூர்ந்து போய் உள்ளது. மேலும் ஏரி அருகே வசித்து வரும் மான், மயில் உள்ளிட்டவை வேட்டையாடப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து, முழு பரப்பளவையும் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஏரியை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.