தக்காளி செடிகளை அழிக்கும் விவசாயிகள்


தக்காளி செடிகளை அழிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 18 April 2023 12:30 AM IST (Updated: 18 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

இடையக்கோட்டை பகுதியில் போதிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

தக்காளி விளைச்சல் அதிகரிப்பு

'உழவர் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு விவசாயிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. தங்களது ஒரு நிலத்தை விற்று மற்றொரு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிருக்கு உரம், பூச்சி மருந்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் பின்னர் பயிர்களுக்கு விலை கிடைக்காததால், வெறுப்படைந்து சாகுபடியை கைவிட்டு மாற்று வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

தக்காளி, முருங்கை, கத்தரி, கொத்தமல்லி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை குறைவாகவும், சில நாட்கள் கூடுதல் விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

விவசாயிகள் விரக்தி

இதனால் சந்தைக்கு வரத்து அதிகமாகியதால், அதற்கு போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.350 வரை விற்றது. தற்போது பெட்டி ரூ.90 வரை விற்பனையாகிறது.

இதனால் தக்காளி பழத்தை பறிப்பதற்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள், தக்காளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாமல், வெயிலில் கருக வைத்து அழிக்கும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தக்காளி ஜூஸ் தயாரிக்கும் ஆலை

இதுகுறித்து ஒண்டி பொம்மன்நாயக்கனூரை சேர்ந்த விவசாயி முருகேசனிடம் கேட்டபோது, 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். அதில் நிலத்தை உழுவதற்கு ரூ.13 ஆயிரம், நாற்றுக்கு ரூ.20 ஆயிரம், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரம், மருந்து, உரத்திற்கு ரூ.50 ஆயிரமும் செலவாகிறது. மேலும் தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு ரூ.3 கூலி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.22-க்கு மேல் விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். ேபாதிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை அழித்து வருகிறேன். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க மத்திய -மாநில அரசுகள் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் ஆலை அமைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


Related Tags :
Next Story