தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு


தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு
x
தினத்தந்தி 11 Feb 2023 1:00 AM IST (Updated: 11 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி கூறி உள்ளார். இதுகுறித்து அவர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

தேசிய வேளாண் சந்தை திட்டம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட தஞ்சை விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டம் தற்போது செயலாக்கத்தில் உள்ளது.

இந்த திட்டம் மூலம் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சார்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை இணைய வழியில் உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை

மேலும் விவசாயிகளின் விளைபொருட்கள் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன் விளைபொருட்களுக்கு உரிய தொகையானது அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தவிர உரிமம் பெற்ற வணிகர்கள் மின்னணு பரிவர்த்தனை மூலம் அதிக இடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யலாம். மேலும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையானது இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

விவசாயிகளின் விவரங்கள்

இந்த திட்டத்தில் பாபநாசம் பகுதியை சேர்ந்த 300 விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அமைந்துள்ள கட்டமைப்பு வசதியினை பயன்படுத்தி கொள்ளவும், தேசிய மின்னணு வேளாண் சந்தையின் மூலம் பயனடையவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story