ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் தர்ணா
சித்தரேவு புளியங்குளத்தில், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் தாலுகா சித்தரேவு அருகே புளியங்குளம் உள்ளது. 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை நம்பி 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. 50 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்தநிலையில் சித்தரேவு, நரசிங்கபுரம் கிராம மக்கள் சிலர் புளியங்குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தனர்.
இதனையடுத்து புளியங்குளத்தில் சித்தரேவு பகுதி மக்கள் செய்திருந்த ஆக்கிரமிப்பை நேற்று அகற்றினர். ஆனால் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக்கண்டித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள், ஆத்தூர் தாலுகா அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் புளியங்குளத்தில் முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தாமாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.