நெற்பயிர்களை காக்க உரம் போடும் பணியில் ஈடுபடும் விவசாயிகள்
நெற்பயிர்களை காக்க உரம் போடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்ததால் நெற்பயிர்களை காக்க உரம் போடும் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
வயல்களில் தேங்கிய தண்ணீர்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் தஞ்சை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி 3 லட்சத்து 15 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சம்பா இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
தஞ்சையை அடுத்த 8-ம் கரம்பை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மேல களக்குடி மற்றும் புனவாசல், விளாங்குடி, வைத்தியநாதன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடவு செய்த சம்பா இளம்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வடிகால்கள் முறையாக சீரமைக்கப்படாததால் மழை தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
விவசாயிகள் வேதனை
கடந்த 4 நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மழை இல்லாததால் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம், 8-ம் கரம்பை, களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக வடிந்துவிட்டது.
ஓரிரு இடங்களில் தேங்கியிருந்த தண்ணீரையும் விவசாயிகள் வடிகால் அமைத்து வெளியேற்றினர். தண்ணீர் வெளியேறினாலும் உரம் போட்டால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும். பணம் இல்லாத நேரத்தில் என்ன செய்வது என தெரியவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நடவு பணி
தண்ணீர் வடிந்த வயல்களில் உரம் போடும் பணியையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நடவு பணி தொடங்காத பகுதிகளில் நடவு பணிகளையும் விவசாயிகள் தொடங்கினர். மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.