பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டு வரக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டு வரக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டு வரக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பொன்னணியாறு அணை
வையம்பட்டியை அடுத்த முகவனூர் ஊராட்சியின் ஒரு பகுதியில் செம்மலைக்கும் - பெருமாள் மலைக்கும் இடையில் அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. அணையின் நீர் பிடிப்பு கரூர் மாவட்டத்திலும், பாசன வசதி திருச்சி மாவட்டத்தில் முகவனூர் ஊராட்சியிலும் உள்ளது. 51 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த 1974-ம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் அணையின் மூலம் 2,100 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகின்றது.
உலக வங்கி நிதியுதவியுடன் சமீபத்தில் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அணையில் படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட சுற்றுலா பயணிகளை ஈர்த்திடுவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கிட உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த அணையில் தற்போது சுமார் 20 அடிக்கு மேல் சேறும் சகதியுமாகத் தான் உள்ளது. ஆகவே அணையை தூர்வாரி முறைப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகின்றது.
காவிரி நீரை குழாய் மூலம்
இதுமட்டுமின்றி சமீபத்தில் கடும் மழை, எங்கு திரும்பினும் வெள்ளம் என்ற நிலை இருந்த போதும் கூட பொன்னணியாறு அணை சுமார் 40 அடியை கூட எட்டாத பரிதாப நிலை தான் இருந்தது. இந்த அணையில் நீர் நிரம்பி அணை திறக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் அணையை நம்பி வாழும் பாசன விவசாயிகள் பெரும் மனவேதனைக்கு ஆளாகி அதிக நிலம் இருந்தும் நீர் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆகவே பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரியில் வெள்ள காலங்களில் உபரியாக சென்று கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை குழாய் மூலம் நீரேற்றம் செய்து இரண்டு அணைகளுக்கும் நீரை கொண்டு வந்து நிரப்பிட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உண்ணாவிரதம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்திட ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.. இந்நிலையில் பொன்னணியாறு அணை பாசனதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் டேம்நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை குறித்து பேசினர்.