பயிர் காப்பீடு நிவாரணம் கோரி குவிந்த விவசாயிகள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அ.பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக் கோரி திரளாக வந்து மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
விவசாயிகள் திரண்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கம் குரூப் அ.பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு எங்கள் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் விவசாயம் மேற்கொண்டோம். மழை பெய்யாத காரணத்தினால் விவசாயம் அடியோடு அழிந்து போனது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானோம். இந்த நிலையில் எங்கள் பாதிப்பிற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
காப்பீடு ெதாகை வழங்க வேண்டும்
ஆனால் எங்கள் பயிர்களுக்கு நாங்கள் காப்பீடு செய்திருந்த நிலையில் எங்கள் கிராமம் முழுவதும் நிவாரண தொகை வழங்காமல் விடுபட்டுள்ளது. முழுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் பயிர் காப்பீடு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே விடுபட்ட எங்களுக்கு உரிய ஆய்வு செய்து உடனடியாக பயிர் காப்பீடு நிவாரண இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது இந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
==========