விவசாயிகள் பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம்
விவசாயிகள் பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிர்க்கடன்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.11.04 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் நடைபெற தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு ஏதுவாக கம்ப்யூட்டர் சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் பெற்று பயனடையலாம்.
மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். அதன்பிறகு உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களைப் பெற்று பயனடையலாம்.
புகார்
பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் 7338749401, பொதுமேலாளர் 8525858055 மற்றும் உதவி பொதுமேலாளர் (கடன்) 7598787407 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புதிய உறுப்பினர் சேர்க்கை இதர குறைபாடுகளுக்கு மண்டல இணைப்பதிவாளர் 7338749400, தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் 7338749403, திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் 7338749405, கோவில்பட்டி சரக துணைப்பதிவாளர் 7338749404 ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.