கீழ்பவானி பாசனத்துக்கு வருகிற 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும்- வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கீழ்பவானி பாசனத்துக்கு வருகிற 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும்- வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

கீழ்பவானி பாசனத்துக்கு வருகிற 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு

கீழ்பவானி பாசனத்துக்கு வருகிற 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேளாண் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான கோரிக்கை குறித்து பேசினார்கள்.

கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி:-

பவானிசாகர் அணை 28-வது முறையாக 100 அடியை எட்டி உள்ளது. இனிமேல் வரும் தண்ணீர் உபரி நீராக ஆற்றில் விடப்பட்டு வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனடியாக முடித்து, வருகிற 1-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். தண்ணீர் திறப்பு குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டூர் வலதுகரை

மேட்டூர் வலதுகரை பாசன சபை தலைவர் கே.ஏ.பழனிசாமி:-

மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசனத்துக்கு வருகிற 1-ந்தேதி தான் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் 15 நாட்களுக்கு முன்னரே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்ட தேதியை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கணக்கிட்டு தொடர்ந்து 135 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் விட வேண்டும். கடைகளில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி வலியுறுத்தினார்.

கீழ்பவானி வாய்க்கால்

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி:-

கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தண்ணீர் திறக்கப்படும் நாளிலிருந்து தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்றார்.

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி.தளபதி:-

சரளை மண், வண்டல் மண் எடுப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலை பலப்படுத்த மண் எடுக்க அனுமதி கேட்டு விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து வருகின்றனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்றார்.

பூச்சிக்கொல்லி மருந்து

மலைவாழ் மக்கள் நலச்சங்க தலைவர் வி.பி.குணசேகரன்:-

தாளவாடி வனப்பகுதியில் விளை நிலங்களில் 1,500 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி விவசாயம் செய்கின்றனர். இதனால் வனத்தின் இயற்கை சூழல் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கு விதிகளை ஏற்படுத்தி அதனை கடுமையாக அமல்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் பணப்பயிர் சாகுபடியை அரசு ஊக்குவிக்கக்கூடாது.

இதுபோல் வனப்பகுதிகளில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதால் வன விலங்குகள் விஷம் கலந்த தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் வனப்பகுதிகளில் உரக் கடைகளை வைக்க அனுமதியளிக்கக்கூடாது. விளை நிலங்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை வேளாண் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

இழப்பீடு

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு:-

அதிகாரிகளை விவசாயிகள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். உடனடியாக வரியை நீக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை ஏற்றத்திற்கு ஏற்ப விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் கொள்முதலை எளிமையாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி குழந்தைவேலு:-

காலிங்கராயன் வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அலுவலர்கள் பேசும்போது, 'கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். நீர் நிலை ஆக்கிரமிப்புகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து அகற்ற வேண்டும்

காலிங்கராயன் வாய்க்கால் 25 கிலோமீட்டர் தூரம் ஈரோடு நகர் பகுதியில் வருகிறது. வாய்க்காலில் நீரோட்டத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள், சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி ஏலம் விட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது' என்றனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story