விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
21 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன் உள்பட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
அறுவடை நேரத்தில் மழை
மாசிலாமணி:- குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் 21 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதுராமன்:- வாய்க்கால், வடிகால்களை முழுமையாக தூர்வாராததால் தற்போது பெய்து வரும் மழையினால் அறுடைக்கு தயாரான குறுவை பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளது. குறுவைக்கு பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில் மழையினால் பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
பயிர் காப்பீட்டு தொகை
மருதப்பன்:- சென்ற ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும். குறுவை பயிருக்கு காப்பீடு செய்யப்படாத நிலையில் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பழனிவேல்:- திருவாரூரில் இருந்து திருப்பள்ளிமுக்கூடல் வரை செல்லும் பி வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும்.
அழகர்ராஜா:- காணூர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. இதனை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். கள்ளுக்குடியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
அதிக விலைக்கு உரம் விற்பனை
சந்திரசேகரன்:- எடையூர் வட்டார வேளாண்மை மையம் மூலம் வழங்கப்பட்ட விதை தரமற்றதாக இருந்ததால் முளைப்பு திறன் இல்லாததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தனியார் கடைகளில் உரம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே, கடைகளின் வாசலில் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தியநாராயணன்:- மோட்டா ரகங்களை தவிர்த்து சன்னரக நெல்லை சாகுபடி செய்திட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான ரகங்கள் குறித்து உரிய ஆய்வு செய்து வழங்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலை ரூ.2,500 வழங்கப்படாத நிலையில் அதிக மகசூல் தரக்கூடிய விதை நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.