தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெற அதிகாரிகள் யோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெற அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயறு வகை பயிர்களில் பயிர் எண்ணிக்கையை பராமரித்து அதிக மகசூல் பெறலாம் என்று விதைப்பரிசோதனை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
பயிர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் போது மண்ணின் வளம் அதிகரிக்கிறது. எனவே பயறு வகை பயிர்களின் சாகுபடியை அதிகரிப்பதுடன் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதும் அவசியமாகிறது. பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு போன்றவைகள் நமது தூத்துக்குடி மாவட்டத்திழல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மானவாரியில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மானவாரி சாகுபடியில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பது மிக அவசியம். பயிர் எண்ணிக்கை குறைந்தால் மகசூல் பாதிக்கப்படும். அதிக மகசூல் பெறுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு 25 முதல் 30 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்க விதையின் முளைப்புத்திறன் சரியான அளவில் இருக்க வேண்டும்.
முளைப்புதிறன்
பயிர் முளைப்புத்திறனில் இயல்பான நாற்று, இயல்பற்ற நாற்று, கடினமான விதை, உயிரற்ற விதை என நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் கடினவிதை என்பது விதை உறைகளின் கடினத்தன்மை காரணமாக, நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருப்பது. இவை பின்னாளில் வயல்களில் முளைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே பயறுவகை பயிர்களில் கடின விதைகளின் எண்ணிக்கையும், இயல்பான நாற்றுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து முளைப்புத்திறனைக் கணக்கிட வேண்டும். எனவே விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பயறுவகை விதைகளை விதைப்பதற்கு முன்பு விதைபரிசோதனை செய்து, விதைத்தால் சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம்.
இந்த தகவலை நெல்லை விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா, தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சேக் நூகு ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.