விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யூரியாவுடன் இணை உரங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது உர பக்கெட்டை இருபுறம் தொங்கவிட்டபடி காவடியை எடுத்து வந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாழை பழம், வெற்றிலை பாக்கு வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி காவடி எடுத்து வந்தவருக்கு பூஜை செய்தனர். அப்போது அவர்கள் அரோகரா கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவர்கள் யூரியாவுடன் இணை உரங்கள் வழங்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கூறுகையில், நடப்பு சொர்ணவாரி நெல் நடவு பணிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான யூரியா தனியார் உரக்கடைகளில் வாங்க சென்றால் இணை உரங்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.