மீண்டும் ஆன்லைன் பதிவை தொடங்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்


மீண்டும் ஆன்லைன் பதிவை தொடங்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
x

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மீண்டும் ஆன்லைன் பதிவை தொடங்கக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது.

விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய பதிவு செய்வதற்காக திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு கடந்த சில தினங்களாக காத்திருந்து பதிவு செய்து வருகின்றனர்.

இதனை கண்டித்து விவசாயிகள் இன்று குச்சி மிட்டாய் சாப்பிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் தரையில் அமர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு செய்து மீண்டும் தொடங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கியது. இதில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து நெல் விற்பனையில் செய்து வந்தோம்.

தற்போது ஆன்லைன் பதிவு நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அலுவலகத்தில் மனு கொடுத்து பதிவு செய்யும் நடைமுறையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் பண இழப்பும், வேலை பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே பழைய நடைமுறைபடி ஆன்லைன் பதிவு கொண்டு வர வேண்டும் என்றனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story