மீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்வளர்க்க மானியம்
பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்தில் பொது பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும்.
நன்னீர்மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒரு ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.4 லட்சத்தில் பொது பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு 2 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் புது பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.3 லட்சம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.
திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், வேலூர் அலுவலகத்தை அணுகலாம். adfifvellore@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உரிய படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.