இயற்கை உரத்துக்காக வயல்களில் செம்மறி ஆடுகளை கிடை போடும் விவசாயிகள்
திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடியை முன்னிட்டு இயற்கை உரத்துக்காக வயல்களில் விவசாயிகள் செம்மறி ஆடுகளை கிடை போட்டு வருகிறார்கள்.
திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடியை முன்னிட்டு இயற்கை உரத்துக்காக வயல்களில் விவசாயிகள் செம்மறி ஆடுகளை கிடை போட்டு வருகிறார்கள்.
நெல் சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். காவிரி நீர் பிரச்சினை காரணமாகவும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை சாகுபடி மேற்கொள்ள ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
குறுவை சாகுபடி
இதனால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டுமே செய்ய முடிந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து முன் கூட்டியே அதாவது மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களை சாகுபடிக்காக தயார்படுத்தி வருகின்றனர்.
இயற்கை உரம்
குறுவை சாகுபடி பணிகள் தொடங்க உள்ள உரங்களின் பயன்பாடு மிக அவசியமாகிறது. ரசாயன உரங்களின் விலை உயர்வு, தொடர்ந்து பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் மண் வளம் மாறி மகசூல் குறைந்து வருவது போன்ற காரணங்களால் இயற்கை முறையிலான சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரசாயன உரங்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையிலும், இயற்கை உரத்துக்காகவும் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் செம்மறி ஆடுகளை கிடைபோட்டு வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் எருவை உரமாக்கி வருகின்றனர்.
விவசாயிகள் நம்பிக்கை
கிடை போடுவதற்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை திருமருகல் பகுதி விவசாயிகள் வரவழைத்து வயல்களில் மேய விட்டுள்ளனர்.
இந்த ஆடுகளின் எரு மூலம் விளை நிலங்களுக்கு இயற்கை உரம் கிடைப்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பகலில் வயலில் மேய விடப்படும் ஆடுகள் இரவில் அங்கேயே தங்க வைக்கப்படுகின்றன.