செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகை
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
செஞ்சி,
தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வியாபாரிகள் ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் ஆன்லைன் மூலம் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து வந்திருந்தனர். இதையடுத்து அந்த நெல் மூட்டைகளுக்கு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் விலை போட வேண்டும் என கூறினர். ஆனால் வியாபாரிகள் வழக்கம்போல் பழைய முறைப்படி நெல்லுக்கு விலை போட்டனர். இதன் காரணமாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு விலையை படிக்கவில்லை.
முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதில் இன்று(அதாவது நேற்று) மட்டும் பழைய முறைப்படி விலை போடுவதாக கூறி, விலை பட்டியல் படிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 2,500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
பரபரப்பு
தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்வதற்காக விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரவி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வேலன் ஆகியோர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆன்லைன் மூலம் விலை போடுவதற்கு சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அவைகளை செய்து கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப்பினும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.