நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
திசையன்விளை அருகே புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். திசையன்விளை அருகே உள்ள காரியாண்டி கிராம விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், காரியாண்டி கிராமத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் புதிதாக கல்குவாரி அமைக்கப்படுவதாக தகவல் உள்ளது. அங்கு புதிதாக கல்குவாரி அமைத்தால் எங்கள் கிராமத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
முஸ்லிம் முன்னணி கழகத்தினர் மாவட்ட பொறுப்பாளர் பிலால்ராஜா தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் பணி முடிவடையவில்லை எனவே ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தினர் கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறோம். முன்கள பணியாளர்களான நாங்கள் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு விபத்து காப்பீடு, நலவாரியம் உள்ளிட்டவை இல்லை. எனவே எங்களுக்கு தனிநல வாரியம் அமைப்பதுடன் அரசு காப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்ஸ் ஜெசி கொடுத்த மனுவில், கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் செல்லப்பா இறந்துவிட்டார். எனது மகள் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் எனது உறவினர் ஒருவரின் மகன் என்னை கவனித்துக் கொள்வதாக கூறி என்னுடன் தங்கியிருந்தார். அவர் சிறிது நாட்களுக்கு பின்னர் என்னை ஏமாற்றி என்னிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி வாங்கிக்கொண்டு தற்போது என்னை கவனிக்க மறுத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த எனது சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். ஏற்கனவே இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட பொது ஜன பொதுநலச்சங்கத்தினர் தலைவர் முகமது அய்யூப் தலைமையில் கொடுத்த மனுவில், அரசு கட்டிடங்களில் தனியார் விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் முழுவதும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. அதை அகற்றி ஆஸ்பத்திரி சுவர்களில் மருத்துவம் சம்பந்தமான விழிப்புணர்வு வாசகங்கள் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.