ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பாடை கட்டி விவசாயிகள் ஊர்வலம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு  பாடை கட்டி விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் பாடை கட்டி ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் பாடை கட்டி ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

பாதை வசதி இல்லை

வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், கீழ்நமண்டி, ஆச்சமங்கலம் கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மயானங்களுக்கு உரிய பாதை வசதி இல்லாததால் இறந்தவர்கள் உடல்களை அங்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த மயானங்களுக்கு முறையாக பாதை வசதி செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அந்த கிராமங்களைச் சேர்ந்த வேதனையுடன் இருந்து வருகின்றனர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

இந்த நிலையில் நேற்று வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க இருந்த விவசாயிகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்ாக நூதன முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆலோசித்து வந்தனர்.

அதன்படி அவர்கள் பாடை ஒன்றை கட்டி தயார் செய்தனர். பாடைக்கு மாலை அணிவித்த அவர்கள் சென்னாவரம் கூட்டுச் சாலையிலிருந்து பாடையை தூக்கிக் கொண்டு வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. அப்போது அவர்களை குறைதீர் கூட்டத்துக்கு செல்ல விடாமல் வந்தவாசி தெற்கு போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் மயானத்துக்கு பாதை வசதி செய்து தரக்கோரி கோஷமிட்டவாறு நின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அங்கு செய்யாறு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனரும், குறைதீர் கூட்ட அலுவலருமான கே.எஸ்.யுவராஜ், வந்தவாசி தாசில்தார் ஆர்.பொன்னுசாமி, வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாடையை கீழே இறக்கி வைத்த விவசாயிகள் மயானங்களுக்கு பாதை வசதி செயது தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆதங்கப்பட்டனர்.

அவர்களிடம் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் பாடையை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர்.


Next Story