உழவர் சந்தைகளில் இடைத்தரகர் இல்லை
உழவர் சந்தைகளில் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருவதாக வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
உழவர் சந்தைகளில் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருவதாக வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
உற்பத்திக்குழு கூட்டம்
சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிகபட்ச விலைக்கு சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.
மேலும் விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் மேச்சேரி, வாழப்பாடி பகுதிகளில் தலா 2 இடங்கள் என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதன கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
மாவட்டத்தில் 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்கள் விளைநிலங்களில் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
மழை அளவு
மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரை 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.