உழவர் சந்தை விவசாயிகள் திடீர் தர்ணா
வாணியம்பாடியில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் தர்ணா
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் உழவர்சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகள் இயங்கி வருகிறது. உழவர் சந்தையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை வைத்துள்ளனர்.
உழவர் சந்தைக்கு இரண்டு பாதை உள்ளது. இதில் ஒரு பாதையில் வெளி வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி விவசாயிகள் வியாபாரத்தை புறக்கணித்து உழவர்சந்தை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகளும் போராட்டம்
இதேபோல் உழவர் சந்தைக்கு வெளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் உழவர் சந்தையின் இரு வழிகளையும் திறக்கக்கோரி வியாபாரத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த உழவர் சந்தை அதிகாரி முருகதாஸ், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். மாதேஸ்வரன் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் நடத்தினால் நடவடிக்கை
அதன் பின்னர் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சம்பத் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அதிகாரி, வருவாய் துறையினர் மற்றும் காவல் துறை, உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் காய்கறி கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், உங்கள் பிரச்சினை குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி அதற்கான முடிவு எட்டும் வரை, உழவர் சந்தையில் உள்ள இரு வழிகளும் திறந்து இருக்கும். சாலை ஓரத்தில் காய்கறி கடைகளை வைக்கக்கூடாது. இதனை மீறி மோதல் போக்கு மற்றும் போராட்டம் என நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் காய்கறி கடை வியாபாரிகள் கலைந்து சென்றனர்.