திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்
திருச்சியில் நடக்கும் விவசாய கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக வேளாண்மை துறை மற்றும் உழவுர்நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்களில் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடக்கிறது. இதில் வேளாண்மையை எளிமை படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டு நுட்பங்கள், பாரம்பரியம் மிக்க மரபுசார் தொழில் நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள், வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் எந்்திரங்கள், பசுமை குடில் தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
எனவே திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.