கொடைக்கானல் கவுஞ்சியில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு


கொடைக்கானல் கவுஞ்சியில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 July 2023 2:30 AM IST (Updated: 15 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் கவுஞ்சியில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் கவுஞ்சியில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாகச சுற்றுலா திட்டம்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இதையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கொடைக்கானலை அடுத்த கவுஞ்சி கிராமத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் சாகச சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அந்தரத்தில் கயிற்றில் செல்லும் சாகச விளையாட்டுகள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் எதிர்ப்பு

இந்த நிலையில் சாகச சுற்றுலா திட்டத்துக்கு கவுஞ்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு காணப்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கவுஞ்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது சாகச சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம், நீராதாரம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும். எனவே சாகச சுற்றுலா மைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கைவிட வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்தே கவுஞ்சி பகுதியில் வசித்து வருகிறோம். சாகச சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தினால் வனத்துக்கு அடையாளமான புல்வெளி, நீராதாரம் அழிந்து விடும். மேலும் பாரம்பரியாக மேற்கொள்ளப்படும் விவசாயம், கால்நடை வளர்த்தல் ஆகியவை பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடாக அமையும். எனவே சாகச சுற்றுலா திட்டத்தை கைவிட வேண்டும், என்றனர்.


Next Story