வெட்டிய கரும்புக்கு பணம் கேட்டு விவசாயிகள் மனு


வெட்டிய கரும்புக்கு பணம் கேட்டு விவசாயிகள் மனு
x

வெட்டப்பட்ட கரும்புக்கு பணம் வழங்க கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்

தஞ்சாவூர்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் துரை.பாஸ்கர் தலைமையில் விவசாயிகள், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு ரூ.21 கோடியை கடந்த 4 மாதமாக வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் புதிய கடன் பெற முடியவில்லை. மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி போஸ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டையை அடுத்த புலவஞ்சி கிராமத்தில் தெற்கு தெருவில் இருந்த விவசாய பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனு அளித்தும் இன்னும் ஆக்கிரமிப்பு அகற்றி வாய்க்காலை மீட்டு கொடுக்கவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.மதுக்கூரில் போலீஸ் நிலையம் அருகே விவசாயத்திற்கு நீர்பாசனம் அளித்து வந்த குளத்தை குப்பை கிடங்காக மாற்றி விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பணம், நகையை மீட்டு தாருங்கள்

சென்னை ரெங்கநாதன் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). இவர் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கொடுத்த மனுவில், எனக்கு பட்டுக்கோட்டையை சேர்ந்த நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கோட்டைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி, எனக்கு மணல் டெண்டர் உரிமம் பெற்று தருவதாக கூறி பணம் கேட்டார். அதன்படி நான் 3 தவணைகளாக பணத்தை அவருடைய வீட்டிற்கு எடுத்துச்சென்று ரூ.25 லட்சம் மற்றும் 30 கிராம் தங்க நகைகள் கொடுத்தேன். ஆனால் மணல் டெண்டர் உரிமம் பெற்றுத்தர வில்லை. எனவே என்னிடம் இருந்து பெறப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.





Next Story