கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி கிராமத்தில் கவிதா, மகேஷ்வரி, பாலாஜியம்மாள், அனிதா, பீமராஜ் ஆகியோருக்கு பாத்தியப்பட்ட 5 ஏக்கர் விளை நிலம் உள்ளது. அதில் மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த நிலத்தை பாதிக்கும் வகையில், தனியார் நிறுவனத்தினர் நிலத்தின் அருகே மின்கோபுரம் அமைப்பதோடு மட்டுமின்றி, மின்கோபுரத்திலிருந்து மின்சார ஒயர்களை விளைநிலத்தின் வழியாக கொண்டு செல்ல முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் கடந்த மாதம் 24-ந்் தேதி கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட விளைநிலங்களின் வழியாக நேற்று மின்சார ஒயரை கொண்டுசெல்வதற்கான பணிகள் நடை பெற்று வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளான பீமராஜ், கவிதா, மகேஷ்வரி, பாலாஜியம்மாள் ஆகியோர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களுடன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.