இலவச மின் இணைப்பை தாமதமின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்


இலவச மின் இணைப்பை தாமதமின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்
x

இலவச மின் இணைப்பை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

இலவச மின் இணைப்பை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

தாமதமின்றி வழங்க வேண்டும்

அம்மையகரம் ரவிச்சந்தர்:-

விவசாயிகளுக்கு ஆழ்குழாய் மூலம் பாசனம் செய்ய இதுவரை 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச மின் இணைப்புகள் காகித வடிவில் மட்டுமே உள்ளதே தவிர, மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டால், மின் கம்பம், மின் கம்பி உள்ளிட்ட தளவாட பொருட்கள் வரவில்லை எனக்கூறி, 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கின்றனர். எனவே, பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

தூர்வாரும் பணி

விவசாயி கோவிந்தராஜ்:-

தூர் வாரும் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. மோட்டார் பம்புசெட் மூலம் அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யவில்லை. ஆற்றுப் பாசனத்தை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மேட்டூர் அணை ஜூன் மாதம் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தூர் வாரும் பணியை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும்.

ஆம்பலாபட்டை சேர்ந்த விவசாயி தங்கவேல்:- வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கடலை, எள், உளுந்து, நெற் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே, மும்முனை மின்சாரத்தை 18 மணிநேரம் வழங்க வேண்டும்.

மும்முனை மின்சாரம்

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்புக்கு டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ.195 வீதம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இத்தொகை பொங்கல் பண்டிகைக்கு பின்பு தான் வழங்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த முறை இத்தொகை விரைவில் கிடைத்தால், அடுத்து சாகுபடியை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.


Next Story