விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
காட்டுப்பன்றிகளை சுட்டு விரட்ட அனுமதிக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டு விரட்ட அனுமதிக்கக்கோரி உழவர் பேரவை விவசாயிகள் சங்கம் சார்பில் வாக்கடை புருசோத்தமன் தலைமையிலான விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விவசாய விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து மகசூல் சேதம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2016-ல் மத்திய அரசு வன விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்கியது. அதைத் தொடர்ந்து 2016-17-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் சேதப்படுத்தும் போது சுட்டு விரட்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அனுமதி அளித்தது. காட்டுப்பன்றிகளை விரட்ட அனுமதி உள்ள நிலையில் வனத்துறை அலுவலர்கள் அனுமதி பெற்று செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும். மேலும் மகசூல் சேதம் கிராம நிர்வாக அலுவலர், வன அலுவலர், வேளாண் துறை அலுவலர் பார்வையிட்டு மகசூல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக விவசாயிகள் காட்டுப்பன்றிகளை சுட்டு விரட்ட அனுமதிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பியபடி பொம்மை துப்பாக்கியை கையில் ஏந்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.