தென்னமாதேவி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க விவசாயிகள் எதிர்ப்பு
தென்னமாதேவி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வேலூர்- விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 234-ல் வல்லம், இனம்கரியாநந்தல், தென்னமாதேவி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க நகாய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த 3 சுங்கச்சாவடிகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
இந்நிலையில் விழுப்புரம் அருகே தென்னமாதேவி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் விவசாயிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட கலெக்டரிடம் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன், நிர்வாகிகள் முருகையன், செல்வராஜ், நாகராஜ், பாஸ்கர், ஜெயகோபி உள்ளிட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், தாங்கள் கொண்டு செல்லும் விளைபொருட்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்தால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதேபோல் சர்க்கரை ஆலைகளுக்கு இப்பகுதியிலிருந்து பல விவசாயிகள் லாரி, சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள் மூலம் கரும்புகளை ஏற்றிச்செல்கின்றனர். இவர்களிடமும் சுங்க கட்டணம் வசூல் செய்தால் மிகுந்த இடர்பாடுகள் ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி சுங்கச்சாவடிகளில் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.