தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் கருகும் பயிர்களை காக்க, பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் கருகும் பயிர்களை காக்க, பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். குளங்களில் போதுமான தண்ணீர் இல்லாததால் இந்த பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, கருகும் பயிர்களை காப்பாற்ற பாபநாசம் அணையில் இருந்து வடகால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளனர். ஆனாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புவிராஜ், துணைச் செயலாளர் நம்பிராஜன், துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

விவசாயிகள் கைது

அதே நேரத்தில் வடகால் பாசன பகுதிகளில் இருந்து போராட்டத்துக்காக புறப்பட்டு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் தலைமையிலான 23 விவசாயிகளை சாயர்புரம் போலீசார் சிவஞானபுரம் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் துணை கோட்ட அலுவலர் ஆதிமூலம், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 5-ந் தேதி முதல் ஒரு வாரத்துக்கு வடகால் பாசனத்துக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாயர்புரம் பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளும் விடுவிக்கப்பட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story