பருத்தியை தரையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம்
பருத்தியை தரையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் தலைமையில் வந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயிலின் முன்பு பருத்தியை தரையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.90-லிருந்து ரூ.65 ஆக குறைந்துவிட்டது. ஆகவே பருத்தி குவிண்டாலுக்கு மீண்டும் ரூ.90 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்குள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாட்கள் வேலை திட்டத்தை வருடம் முழுவதும் தருவதால் மழைக்காலங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. அதனால் 100 நாட்கள் வேலை திட்டத்தை கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டும் அல்லது 100 நாட்கள் வேலையாட்களை விவசாயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
மேட்டூரில் இருந்து வடபுறத்தில் வாய்க்கால் வெட்டி அய்யாற்றுடன் இணைத்தால் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் 2 கோடி பேர் பயன் அடைவார்கள். கந்துவட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்களை திருச்சியில் தடை செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.