அரசியல் கட்சி பிரமுகர்களின் தலையீட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


அரசியல் கட்சி பிரமுகர்களின் தலையீட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x

அரசியல் கட்சி பிரமுகர்களின் தலையீட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

நெல் கொள்முதல் நிலையம்

உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி ஊராட்சியில் வடக்கு பகுதியில் உள்ள வடக்கிப்பட்டியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மைய அலுவலராக பணியாற்றி வருபவர் முருகேசன். நேற்று முன்தினம் இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, எடை போடப்பட்டது. பின்னர், இரவில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது சிறுநாவலூரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் கும்பலாக கொள்முதல் நிலையத்திற்கு வந்து, தங்களுக்கு வேண்டியவர்களின் நெல்மணிகளை எடை போடாதது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்தவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு நெல்மணிகளை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

சாலை மறியல்

இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் மைய அலுவலர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ந்து அரசியல் தலையீடுகள் இருப்பதை கண்டித்தும், அங்கு அடிக்கடி அத்துமீறல்கள் நடப்பதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், தேங்கியுள்ள நெல் குவியலை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் வடக்குப்பட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சிறுநாவலூரில் இருந்து எரகுடி செல்லும் சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.

விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த துறையூர் தாசில்தார் புஷ்பராணி, உதவி தாசில்தார் கோவிந்தராஜூ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட தரக்கட்டுப்பாடு மேலாளர் வனிதாமணி, துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கொள்முதல் நிலையத்தில் கள ஆய்வு செய்த பின், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் தாசில்தார், நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார்.

மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story