முள்ளியாற்றின் கரை உடையும் அபாயம்


முள்ளியாற்றின் கரை உடையும் அபாயம்
x
தினத்தந்தி 14 Nov 2022 7:00 PM GMT (Updated: 14 Nov 2022 7:00 PM GMT)

கோட்டூர் அருகே முள்ளியாற்றின் கரை உடையும் அபாயம் உள்ளது. ஆற்றில் உள்ள புதர்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர் அருகே முள்ளியாற்றின் கரை உடையும் அபாயம் உள்ளது. ஆற்றில் உள்ள புதர்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முள்ளியாறு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தட்டாங்கோவில் கோரையாற்றில் இருந்து பிரிந்து செல்கிறது முள்ளியாறு. இந்த ஆறு கோட்டூர், திருத்துறைப்பூண்டி, தாணிக்கோட்டகம், மருதூர், வாய்மேடு வழியாக சென்று கடலில் கலக்கிறது.

தாணிக்கோட்டகம் வரையில் பாசன ஆறாக உள்ள முள்ளியாறு, மருதூர், வாய்மேடு பகுதிகளுக்கு முக்கிய மழைநீர் வடிகாலாக உள்ளது. முள்ளியாற்றில் இருந்து பிரியும் நூற்றுக்கணக்கான பாசன வாய்க்கால்கள் மூலம் ஆதிச்சபுரம், கோட்டூர், புழுதிகுடி, காடுவாக்குடி, திருப்பத்தூர், ராயநல்லூர், விளக்குடி, மேட்டுபாளையம், பள்ளங்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இத்தகைய முள்ளியாறு உரிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது.

இதன் காரணமாக ஆற்றில் மழைநீர் வடிந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. கனமழை பெய்தால் ஆற்றில் உடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

விவசாயிகள் கண்ணீர்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்தது. ஆதீத கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் உள்ள உப்பனாறு மற்றும் பாசன வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து கரை உடைப்பு ஏற்பட்டு சம்பா பயிர் செய்யப்பட்டிருந்த வயல்கள் வெள்ளக்காடாக மாறின. அங்கு மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.

இளம் பயிர்கள் அழுகி வீணாகி உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதற்கு காரணம் வடிகால்கள், ஆறுகளை முறையாக பராமரிக்காமல் இருந்ததே என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்துக்கும் மழை அச்சுறுத்தல் இருப்பதால் முள்ளியாறு போன்ற பாசன ஆறுகளை விரைந்து தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இளம் பயிர்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதால் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. ஏற்கனவே பெய்த மழை காரணமாக சம்பா மற்றும் தாளடி நடவு செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி, வடியாமல் உள்ளது. இந்த நிலையில் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் ஆகாயத்தாமரைகள், புதர்கள் மண்டி உள்ளதால், இளம் பயிர்கள் அழுகி விடுமோ என்று விவசாயிகள் அச்சப்படுகிறார்கள்.

இதுகுறித்து கோட்டூர் அருகே உள்ள தாதன்திருவாசல் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

பலவீனமான ஆற்றங்கரை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஆதிச்சபுரம் பாலத்தில் இருந்து மேட்டுபாளையம் பாலம் வரை முள்ளியாற்றில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆகாயத்தாமரை மற்றும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் மழைநீர் வேகமாக வடிவதில் சிரமம் ஏற்படுகிறது. பல இடங்களில் முள்ளியாற்றின் இரு கரைகளும் பலவீனமாக உள்ளன. கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளிலும், சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கோட்டூர் பகுதியில் உள்ள முள்ளியாற்றின் கரையை பலப்படுத்தி சீரமைக்கவும், புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story