கரும்பு இடைத்தரகர்களின்றி நேரடியாக கொள்முதல் செய்யப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு


கரும்பு இடைத்தரகர்களின்றி நேரடியாக கொள்முதல் செய்யப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 Dec 2022 7:15 PM GMT (Updated: 30 Dec 2022 7:15 PM GMT)

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கான கரும்பை இடைத்தரகர்களின்றி நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கான கரும்பை இடைத்தரகர்களின்றி நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கரும்பு சாகுபடி

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பணமும் வழங்கி வந்தது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை ஆர்வமாக மேற்கொண்டு வந்தனர்.

கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையும் கிடைத்து வந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் நடப்பு ஆண்டு கூடுதலான பரப்பளவில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

ஆனால் தமிழக அரசு இந்த ஆண்டு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்த்தது. மேலும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கரும்பை இடத்தரகர்களின்றி நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாசிலாமணி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நேரடியாக...

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை பாராட்டுகிறோம். இடைத்தரகர்களின்றி நேரடியாக அரசே கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் இந்த தொகுப்பு திட்டத்தில் கரும்புடன் தேங்காய்களையும் சேர்த்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story