கரும்புகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
2020-2021-ம் ஆண்டில் வெட்டப்பட்ட கரும்புகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தும் இன்னும் வழங்கப்படவில்லை. அது உடனே வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
2020-2021-ம் ஆண்டில் வெட்டப்பட்ட கரும்புகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தும் இன்னும் வழங்கப்படவில்லை. அது உடனே வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
கரும்பு சாகுபடி
இந்தியாவில் 3 சதவீத நிலப்பரப்பில் 4.5 கோடி விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் மொத்த கரும்பு சாகுபடி 4.96 லட்சம் ஏக்கர் ஆகும். இதில் தமிழகத்தின் பங்கு மட்டும் 50 சதவீதம் ஆகும். அதாவது தமிழகத்தில் 2.5 லட்சம் ஏக்கர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கரும்பு சாகுபடியின் காலம் 1 ஆண்டு ஆகும். கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2020-2021-ம் ஆண்டில் வெட்டப்பட்ட கரும்புகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் சிறப்பு ஊக்கத்தொகை கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
அரசாணை வெளியிடப்படுமா?
எனவே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். மேலும் விவசாயிகள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் இந்த தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து இந்த ஆலைக்கு கரும்புகளை விவசாயிகள் அனுப்பி வருகிறார்கள். 4 ஆயிரம் ஏக்கரை வரை இந்த பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட...
இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:-
தேழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- கரும்பு டன்னுக்கு ரூ.2,750 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெட்டப்பட்ட கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 கூடுலாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. 1 ஏக்கரில் 60 டன் வரை கரும்பு கிடைக்கும். விவசாயிக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் விவசாயிகள் தீபாவளி பண்டிகைய மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். மேலும் தற்போது கரும்புகளை வெட்டுவதற்கு எந்திரங்கள் வந்தாலும், பண்ருட்டி போன்ற பகுதிகளில் இருந்து கூலி தொழிலாளர்கள் வந்து கரும்புகளை வெட்டி ஆலைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பிற ஆலைகளிலும் அரவை நடைபெறுவதால் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே அரவை பருவத்தை நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும்.
முன்கூட்டியே அரவை தொடங்குமா?
விவசாயி முதுகுளம் பொன்.ராஜ்குமார்:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவோம் என அறிவித்தார்கள். ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே நடப்பு ஆண்டு அரவை பருவத்தின் போது கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு வெட்டப்பட்ட கரும்புகளுக்கு அறிவித்த டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.195-ம் உடனே வழங்க வேண்டும். தற்போது வேளாண் இடுபொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. எனவே இந்த காலக்கட்டத்தில் உடனடியாக சிறப்பு ஊக்கத்தொகையை உடனே வழங்கினால் விவசாயிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் கரும்பு வெட்டுவதற்கான ஆட்கள் பற்றாக்குறையை தடுக்கும் வகையில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரவை பருவத்தை நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.