மேட்டூர் அணையில் இருந்து தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள்


மேட்டூர் அணையில் இருந்து தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள்
x

குறுவை பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து தினசரி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

குறுவை பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து தினசரி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீர் ஆதாரம்

காவிரி டெல்டாவின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு டெல்டா மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 போகம் நெல் விளைவிக்கிறார்கள்.

இதில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்த உடன் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய் எனும் புது ஆறு உள்ளிட்ட ஆறுகளுக்கு பிரித்து அனுப்பப்படும். இந்த தண்ணீர் கடைமடை வரை சீராக சென்றடைந்தால் தான் விவசாயிகள் சிரமமின்றி சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும்.

டெல்டா பாசனம்

வழக்கம்போல் இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி டெல்டா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கல்லணையை 16-ந் தேதி வந்ததை தொடர்ந்து அங்கிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளதால் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறுவை பயிரை...

இந்த நிலையில் குறுவை பயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் மேட்டூர் அணையில் இருந்து தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சீனிவாசன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து விடுவிக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. தினசரி மேட்டூர் அணையில் இருந்து வெளியிடப்படும் 11 ஆயிரம் கன அடி நீரில் திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது போக மீதமுள்ள அளவு கல்லனைக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கன அடி தான் வந்து சேரும்.

மழை இல்லை

இப்போது மழையும் பெய்யவில்லை. அதிகமாக வெயில் அடிக்கிறது. இப்போது கிடைக்க கூடிய நீரை வைத்து குறுவை சாகுபடி செய்ய இயலாது. நடவு பணிகள் பாதிக்கப்படுகிறது. ஆகையால் மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரை தொடர்ந்து 15 நாட்களுக்கு வெளியேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் குறுவை பணிகள் தாமதம் இன்றி நடைபெறும். மாவட்ட கலெக்டர், பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story