முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பிய விவசாயிகள்


முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பிய விவசாயிகள்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள்தபால் அட்டை அனுப்பினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விவசாயிகளிடம் இருந்து உரித்த தேங்காயை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி தலைமையில் தபால் அட்டை அனுப்பப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னை விவசாயத்தை காப்பாற்ற ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அரசு கொப்பரை தேங்காயை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இதேபோன்று உரித்த தேங்காயை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு உள்பட மாவட்டத்தில் 30 இடங்களில் விவசாயிகள் 1000 தபால் அட்டைகளை அனுப்பினோம். இந்த வாரம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தபால் அட்டை அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story