விவசாயிகளுக்கு தங்குதடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
விவசாயிகளுக்கு தங்குதடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
நடப்பு சாகுபடி பருவத்திற்கு விவசாயிகளுக்கு தங்குதடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என திருவாரூரில் மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி கூறினார்.
ஆய்வு
திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள், பணி விதை மாதிரி விதைகள் மற்றும் அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகளையும், பெறப்படும் மாதிரிகள் உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
ஸ்பெக்ஸ் இணையதளம்
விதை முளைப்புத்திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு மற்றும் நாற்றுக்களின் வளர்ச்சி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 398 சான்று விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 33 மாதிரிகள் தரக்குறைவு என அறிவிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற 365 மாதிரிகள் விதைச்சான்று உதவி இயக்குனர் மூலம் சான்றட்டைகள் பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
488 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அதில் தேர்ச்சி பெறாத 21 தரமற்ற விதை மாதிரிகளுக்கு விதை ஆய்வாளர் மூலம் விற்பனை தடை வழங்க முடிவுகள் ஸ்பெக்ஸ் இணைய தளம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
உறுதி செய்ய வேண்டும்
மேலும் 217 பணிவிதை மாதிரிகள் விவசாயிகளால் ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் பெறப்பட்டு பரிசோதனை முடிவுகள் மின்னஞ்சல் மூலமும், வாட்ஸ்அப் மூலமும், தபாலிலும் விரைவாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தங்குதடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது விதை பரிசோதனை அலுவலர் குப்புசாமி, மூத்த வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி, வேளாண்மை அலுவலர் சிவசக்தி மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.