தேவையான கரும்புகளை விவசாயிகள் பயிரிட வேண்டும்
தலைஞாயிறு சர்க்கரை ஆலை இயங்கும்போது தேவையான கரும்புகளை விவசாயிகள் பயிரிட வேண்டும் என கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
மணல்மேடு:
தலைஞாயிறு சர்க்கரை ஆலை இயங்கும்போது தேவையான கரும்புகளை விவசாயிகள் பயிரிட வேண்டும் என கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
தலைஞாயிறு சர்க்கரை ஆலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறில் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. லாபத்தில் இயங்கி வந்த இந்த சர்க்கரை ஆலை பல்வேறு காரணங்களால் நஷ்டம் அடைந்து மூடப்பட்டது.
இதனால் ஆலையை நம்பி இருந்த 2 லட்சம் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆலையை திறப்பதற்காக குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
அதன்படி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 3 முறை ஆலைக்கு வந்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைஞாயிறு சர்க்கரை ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். ஆய்வின்போது கூட்டுறவு ஆலையின் மேலாண்மை இயக்குனர் சதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், என்.பி.கே.ஆர்.ஆர். சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சதீஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், தலைஞாயிறு ஊராட்சிமன்ற தலைவர் சேரன்செங்குட்டுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கரும்பு உற்பத்தி
முன்னதாக கலெக்டர், விவசாயிகள் மற்றும் ஆலை இயக்குனர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தமிழக அரசு தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க முடிவெடுத்துவிட்டது. இந்த ஆலை இயங்கும்போது தேவையான கரும்புகளை விவசாயிகள் பயிரிட வேண்டும்.
மேலும் ஆலையின் அங்கத்தினர்களை அழைத்துப் பேச வேண்டும். தற்போது 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்கின்றனர். மேலும் தேவையான கரும்பை உற்பத்தி செய்யவேண்டும். ஆலை இயங்குவதில் தாமதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள ஆலைகளுக்கு கரும்பை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.