விவசாயிகள் தரமான விதையை அறிந்து சாகுபடி செய்ய வேண்டும்
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற விவசாயிகள் தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று விதைப்பரிசோதனை அலுவலர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற விவசாயிகள் தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று விதைப்பரிசோதனை அலுவலர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு
திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் கோவை சரக விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா 2022-23-ம் ஆண்டிற்கான விதைப்பரிசோதனை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு மற்றும் விதைப்பரிசோதனை நிலையத்தில் உள்ள உபகரணங்கள், கருவிகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வு செய்தார்.
அப்போது சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள், பணி விதை மாதிரி விதைகள் அதன் தரம், முளைப்புத்திறன், பெறப்படும் மாதிரிகள் உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா?.
மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
746 சான்று விதை மாதிரிகள்
அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளால் வழங்கப்படும் விதை மாதிரிகளில் வதரங்களை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு முடிவுகளை விரைவாக வழங்கிட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2022-23-ம் ஆண்டில் 746 சான்று விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 53 மாதிரிகள் தரக்குறைவு என அறிவிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற 693 மாதிரிகள் விதைச்சான்று உதவி இயக்குனர் மூலம் சான்றட்டைகள் பொறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறாத 56 தரமற்ற விதை மாதிரிளுக்கு விதை ஆய்வாளர் மூலம் விற்பனை தடை வழங்க இணைய தளம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
அதிக மகசூல்
மேலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும். மேலும் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய விதை மாதிரிக்கு ரூ.80 நேரிலோ அல்லது மணி ஆர்டர் மூலமாகவோ திருவாரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி, தொழில்நுட்ப ஆய்வு மற்றும் பொருளாய்வின் வேளாண்மை அலுவலர் சிவசக்தி மற்றும் உதவியாளர் வனஜா ஆகியோர் உடன் இருந்தனர்.