நெடும்பலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்குப்பின் உளுந்து சாகுபடி
நெடும்பலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்குப்பின் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நெடும்பலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்குப்பின் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
உளுந்து சாகுபடி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உளுந்து சாகுபடி செய்ய வேளாண்மை துறை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கர், வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் ஆகியோர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். சமீபத்தில் நடந்த நெடும்பலம் பாசனதாரர் சபை கூட்டத்தில் நடப்பு ஆண்டில் உளுந்து சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் பலர் ஆர்வம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நெடும்பலம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் உளுந்து சாகுபடி பணிகளை ஆர்வத்துடன் தொடங்கி உள்ளனர்.
கைவிட்ட விவசாயிகள்
இதுதொடர்பாக நெடும்பலம் கிராமத்தை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் கூறியதாவது:- எங்களுடைய கிராமத்தில் 456 எக்டேர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் அறுவடைக்கு முன்னரே உளுந்து தெளிக்கும் முறை நடைமுறையில் இருந்தது
அறுவடை எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அதன் சக்கரங்களில் சிக்கி உளுந்து விதைகள் சேதம் அடைந்து முளைக்காமல் போய்விடும் என்பதால் விவசாயிகள் உளுந்து சாகுபடியை கைவிட்டு விட்டனர்.
தனிக்கவனம்
மேலும் கால்நடை வளர்ப்பில் அதிக விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதனால் உளுந்து செடிகளை பாதுகாக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதால் உளுந்து சாகுபடி கடந்த 25 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது வேளாண்மை துறை உளுந்து சாகுபடி பரப்பளவை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உளுந்து சாகுபடியில் கிடைக்கும் இரட்டிப்பு வருமானம் காரணமாக பல விவசாயிகள் உளுந்தை பயிர் செய்ய விரும்புகின்றனர்.
நடப்பு ஆண்டில் நெடும்பலம் ஊராட்சியில் உள்ள நெடும்பலம், மங்களநாயகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கூடுதலாக உளுந்து சாகுபடியை செய்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.