கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி, வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எடப்பாடி
எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி, வேளாண் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரி பணி இடைநீக்கம்
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சியில் உள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்தின் மூலம் பயிர்க்கடன், குறுகிய கால கடன், மத்திய கால கடன், நீண்ட காலகடன் மற்றும் நகை கடன் உள்ளிட்ட பல்வேறு பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதி விவசாயிகள் இந்த சங்கத்தில் தங்கள் சேமிப்பை குறுகிய கால மற்றும் நீண்ட கால இட்டு வைப்புகளில் முதலீடு செய்து உள்ளனர். இந்நிலையில் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்த மோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கத்தின் பல்வேறு பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்டவற்றில் மோசடி செய்து, ரூ.3 கோடியே 63 லட்சம் கையாடல் செய்ததை கூட்டுறவு துறை உயர் அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் முற்றுகை
இந்நிலையில் நேற்று அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள், கையாடல் செய்த முன்னாள் செயலாளர் மோகன் மற்றும் இதர அலுவலர்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தாங்கள் இழந்த தொகையை மீட்டு தரவும், சங்கத்தில் உள்ள தங்களது இட்டு வைப்பு தொகைகளை திரும்ப தர வலியுறுத்தியும் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். கையாடல் செய்த முன்னாள் அலுவலர்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், விவசாயிகளின் பாதிப்புகள் மிக விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விவசாயிகளின் போராட்டம் வெள்ளிரி வெள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.